Saturday, December 24, 2011

விழா அழைப்பிதழ்

எனது தந்தை பழ.கோமதிநாயகம் அவர்களின் முனைவர் பட்டத்திற்கான ஆய்வறிக்கை (நூல்), அவருடைய நீண்ட நாள் நண்பரும் பத்திரிக்கையாளருமான திரு.எம்.பாண்டியராஜன் அவர்களின் சீரிய முயற்ச்சியால் தமிழில் 'தாமிரவருணி - சமூக - பொருளியல் மாற்றங்கள்' என்ற தலைப்பில் நூலாக, பாவை பதிப்பகத்தின் வெளியீடாக  வரவிருக்கிறது. இந்நூல் வெளியீட்டு விழா எனது தந்தையின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளான 29-12-2011 அன்று சென்னையில் நடைபெறவிருக்கிறது.


Wednesday, January 27, 2010

கனவுகள் இல்லா வெளி


எழுதியது - ஜூலை 17 2009

ஈழப் போரில் உச்சக்கட்ட மனித அவலத்தை சந்தித்த மே மாத இறுதியிலிருந்து இன்று வரையிலும் ஈழம் தொடர்பான செய்திகளை படிக்கவோ கேட்கவோ இயன்றவரை தவிர்த்தே வருகிறேன்.வேறு யாரும் தவறிக் கேட்டால் கூட "செய்திகள் படிப்பதில்லை" என்று கூறி பேச்சினை வேறு திசைக்கு திருபிவிடுவதில் அதீத முனைப்பு எடுத்துக் கொள்கிறேன்.அந்த சில நிமிடங்களில் மிகவும் பதட்டம் கொள்கிறேன். பேச்சு வேறு திசையில் சென்றபின் தான் நிதானம் கொள்கிறேன்.

ஈழ போராட்டம் மற்றும் விடுதலை சார்ந்த ஒத்தக்கருத்துடைய நெருங்கிய நண்பர்களிடத்தும் பரஸ்பர அமைதியே குடி கொண்டுள்ளது. அவர்களும் பேசுவதில்லை. நானும் பேசுவதில்லை. பேரவலத்தைப் பற்றிய வருத்தத்தைக் கூட குறைந்த பட்சம் பரிமாறிக்கொள்ளவில்லை என்றே நினைக்கிறன். எதாவது பேசி இருந்தால் நிச்சயம் பதட்டமடைந்திருப்பேன். பேசாமல் இருப்பதும் அந்த வகையில் நல்லது தான்.

இணையத்தில் செய்திகள் படிக்கிறேன். தலைப்புச் செய்திகள் தான்.ஒவ்வரு முறையும் அதன் முகப்பிற்கு செல்லும் முன் என் ஆழ் மனத்திலிருந்து அடக்கப்பட்ட கனவுகள் பிதுங்கிக்கொண்டு வரும். என் கண்கள் நான் விரும்பும் செய்தியை இன்றாவது பார்க்கும் என்ற நம்பிக்கையுடன் திறப்பேன். சிறிது நேரத்தில் கோபம்,வெறுப்பு,இயலாமை,இரக்கம் எல்லாம் மாறி மாறி என்னை துவட்டி வெறுமையில் போய் விழுவேன். இந்த நிகழ்வு தினமும் தொடர்கிறது. ஏன் நான் என்னை இப்படித் துன்புறுத்திக்கொள்கிறேன் என்றே புரியவில்லை.

என் மனம் சொல்கிறது எல்லாம் முடிந்து விட்டது என்று. ஆனாலும் எங்கேயோ என்றோ ஒரு நம்பிக்கை கீற்றை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். தர்மம் வெல்லும் என்னும் தத்துவத்தை மிக ஆழமாக நேசிப்பதால் ஏற்படும் எதிர்பார்ப்பு.

மூன்று இலட்சம் மனிதர்கள், இருத்தலே வாழ்வின் குறிக்கோள் என்று வெட்டவெளி சிறையில் உழன்றுக் கொண்டிருக்கிறார்கள்.அவர்களின் இன்றைய அவசியத் தேவை என்ன?என் மனதில் தோன்றும் எண்ணங்கள் என்னை நிலை தடுமாறச் செய்கிறது. அந்த மனிதர்கள் உதவப்பட வேண்டும். இதில் மாற்றுக்கருத்து இல்லை.அனால் அந்த உதவி யாரிடமிருந்து வர வேண்டும் என்பதில் தான் என் சிக்கல் ஆரம்பமாகிறது. ஏனென்றால் இரத்தக் கரை படிந்த கைகளின் உதவி முப்பது வருட விடுதலைப் போராட்டத்தை ஒன்றும் இல்லாமல் ஆகிவிடும் என்ற பயம் எனக்கு. அந்த உதவி மூன்று இலட்ச மனிதர்களின் வாழ்கையை மேன்மையனதாகலாம். ஏற்கப்படக்கூடிய அரசியல் தீர்வு ஒன்று தோன்றலாம். அந்த மக்கள் உண்மையிலேயே ஒரு நாள் மீண்டும் புன்னகைக்கலாம்.என் உள்ளுணர்வு இவற்றில் ஒன்று கூட நடக்கக்கூடாது என்றே சொல்லுகிறது. என்ன கொடுமை?

இவற்றில் எதாவது ஒன்று நடந்தாலும் அது நான் சுமந்துகொண்டு இருக்கும் கனவினை நொடிப்பொழுதில் இல்லாமல் ஆகிவிடும். கனவுகள் இல்லா வெளி பயங்கரமானது. அது எனக்கு வேண்டாம்.